CCM Tamil Bible Study - புத்தகத்தின் மீதுள்ள வாஞ்சை
- Get link
- X
- Other Apps
வெளி 10:9a. நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன்.
புத்தகத்தின் மீதுள்ள வாஞ்சை
பரலோகத்திலிருந்து உண்டான சத்தத்திற்கு கீழ்ப்படிந்து தூதனிடம் சென்று தனக்காக சிறு புத்தகத்தை கேட்கின்றார். யோவானுக்குள் மூன்று காரியங்கள் நடந்ததினித்தம் இந்த காரியத்தை செய்கின்றார்.
முதலாவது கீழ்ப்படிதல். இடிமுழக்கங்களோடு பிறந்த சத்தத்திற்கு செவி கொடுக்கிறவராய் இருந்ததினால் அதற்கு கீழ்படிந்தார். செவி கொடுக்கும் ஆர்வம், விருப்பம், வாஞ்சை இல்லாவிட்டால் கீழ்ப்படிதல் நிறைவேறாது. கீழ்ப்படிதல் இல்லாமல் வாஞ்சைகளையும், புதிரானவைகளையும் அறிந்து கொள்ள முடியாது. பத்து கட்டளைகளும் இடிமுழக்கங்களினூடே தான் உண்டானது. மோசே ஆண்டவரின் சத்தத்துக்கு கீழ்படிந்து கட்டளைகளை பெற்றுக் கொண்டார். தேவனிடமிருந்து தேவ ஆவியினால் பெற்று எழுதி வைக்கப்பட்டுள்ள எழுத்துகளின் தாற்பரியங்களை அறிய வேண்டும் என்றால் கொடுத்தவரின் உணர்வூட்டல்களுக்கு முழுவதுமாக நாம் கீழ்படிய வேண்டும்.
இரண்டாவது புத்தகத்தில் உள்ளவைகளை அறிய வேண்டும் என்ற ஆர்வம் யோவானுக்கு இருந்தது. முத்திரிக்கப்பட்டவைகளின் ரகசியங்களை அறியவும், இடிகளின் தாற்பரியங்களை அறியவும் ஆவல் கொண்டிருந்த யோவானுக்கு தேவனுடைய புத்தகத்தில் உள்ளவைகளை அறியவும் தணியாத தாகம் கொண்டிருந்தார். தேவன் நமக்கு தந்துள்ள புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை நாம் வாசிக்க முடியும். ஆனால் எழுத்துக்களில் உள்ள உயிர், உணர்வு, உறவை நாம் அறிய வேண்டுமென்றால் ஆவியானவரால் தூண்டப்படும் வாஞ்சை வேண்டும். ஆகையினால் தான் அது சிலருக்கு பாலாகவும் காணப்பட்டது.
மூன்றாவது புத்தகத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம். கீழ்படிதலும், ஆர்வமும் இல்லாவிட்டால் யோவானால் இதை எனக்குத் தாரும் என்று கேட்டிருக்க முடியாது. தேவனுடைய புஸ்தகத்தை நாம் நம்முடையதாக்கிக்கொள்ள நாம் அவரிடமிருந்து தூண்டுதலை பெற்றிருக்க வேண்டும். சுய விருப்பத்தின் படியாக விவிலிய வாக்குகளை சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. ஆவியினாலும், தேவ விருப்பத்தினாலும் நாம் கட்டி எழுப்பப்படாமல் வசனத்தின் மீது பற்றும் அதை சொந்தமாக்கிக் கொள்ளுதலும் நிறைவேறாது.
விவிலியம் எப்பொழுது ஒரு மனிதனுக்குரிய சொந்த வாழ்வியல் பாடமாக மாறுகிறதோ அப்பொழுது தான் அதில் உள்ள எழுத்து, வடிவம் பெற்று உயிர் பெற்று அவனோடு உறவு கொள்ளும்.
இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
1 பேதுரு 2:1-3
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment