CCM Tamil Bible Study - தண்ணீர் மேல் அதிகாரம்
- Get link
- X
- Other Apps
வெளி 11:6b. அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும் அதிகாரம் உண்டு. யாத்7:14-23;வெளி8:8;16:4.
தண்ணீர் மேல் அதிகாரம்
மனித வாழ்வுக்கு நீர் மிகவும் அவசியமானதாகும். பூமி சூரியனின் வெப்பத்தால் எரிந்து போகாமலிருக்க இந்த நீர் மிகவும் அவசியமானது. உழைப்புகளினூடே மனித உடல் சூடேறி செயலிழந்து போகாமல் இருக்கவும் இரத்தமானது சரியாக செயல்படவும் நீர் அவசியமாகின்றது. நீரானது நிலத்திலிருந்தும், வானத்திலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றது. வானத்து மழையை தடுத்த தீர்க்கதரிசிகள் பூமியின் நீரை வற்றிப் போக பண்ணவில்லை. பூமியில் உள்ள நீரை இரத்தமாக மாற செய்கின்றார்கள். பூமியின் நீர் இரத்தமாக மாறும் அதே வேளையில் வானத்து மழை இல்லாததால் பூமியின் நீர் வற்றிக் கொண்டே போய் முடிவில் பூமியெல்லாம் இரத்தம் கலந்த நிறமியாக காட்சியளிக்கும்.
தாகம் உள்ளவர்களுக்கு தண்ணீரை குடிக்க கொடுக்கும் மனித மாண்புகள் யாவும் அகற்றப்படுகின்றது. தண்ணீருக்காய் அலைந்து ஓடும் மக்கள் கூட்டத்தை எங்கும் பார்க்கலாம். நீருக்காய் அடித்துக் கொள்கிற காலங்கள் இதுவாகும். இப்பொழுதே நீருக்காய் போராடுகின்றார்கள். இரக்கம், தயவு, கருணை, காருண்யம், மனிதாபிமானம் யாவும் நீங்கி போகும்.
கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கின்றவர்களுக்கும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் நீரை கொடுக்க மாட்டோம் என்று கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்களுக்கு இரத்தம் கலந்த தண்ணீரேக் கிடைக்கும்.
தேவ மனிதர்களின் இரத்தத்தை குடிக்க வாயை ஆவென்று திறந்த பூமிக்கும் மனு குலத்துக்கும் இரத்தம் கலந்த தண்ணீர் கொடுக்கப்படும்.
தேவ மனிதர்கள் தண்ணீர் மேல் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கோபம் கொண்டு தண்ணீர் மேல் அதிகாரம் செலுத்துவார்களென்றால் பூமி செழிப்பையும், பசுமையையும் இழந்து வாடிப்போகும். பூமிக்குரிய எல்லா நன்மைகளும் ஆசீர்வாதங்களும் தேவ மனிதர்களிடையே உள்ளது. பூமியை செழிப்பாக்கவோ பூமியை இரத்தமாக்கவோ அதிகாரம் பெற்றுள்ளதை அறிந்துள்ள சாத்தான் எப்படியாவது அவர்களை அழித்துவிட துணிகின்றான். ஆனாலும் தேவனுடைய ஆற்றலும் அதிகாரமும் அவர்கள் மேல் இருப்பதால் சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது.
கடைசி காலம் இரத்தத்தை குடிக்கும் காலமாகும். இரத்தத்திலே வாழ்கின்ற காலமாகவும் காணப்படும். மனிதர்கள் சமாதானத்தை இழந்து ஒருவரின் இரத்தத்தை பிறிதொருவர் பரிமாறிக் கொண்டு பூமியை இரத்தக்காடாகவும் இரத்தப் பழி நிறைந்ததாகவும் மாற்றுகிறார்கள்.
இதுவும் தேவனுடைய செயலே.
நற்காரியங்களை பேசுகிறவர்கள் அழிக்கப்படுகிற காலம். துன்மார்க்கம் தழைத்தோங்குகிற காலம்.
ஆனாலும் சாட்சிகளின் ஆற்றலை எதிர்க்க துணிவில்லாத உலகம்.
மனுஷர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன். அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும். அவர்கள் மாம்சம் எருவைப் போல் கிடக்கும்.
செப்பனியா 1:17
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment