CCM Tamil Bible Study - பரிசுத்தவான்களின் ஜெபங்கள்
- Get link
- X
- Other Apps
வெளி 5:8c. பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய துபவர்க்கத்தால் நிறைந்த பொற்காலசங்களை பிடித்துக் கொண்டு.. வெளி 15:7;8:3,5; சங்கீதம் 141:2; யாத் 30:7,8..
பரிசுத்தவான்களின் ஜெபங்கள்
தூபகலசம் ஆசரிப்பு கூடாரத்திலும் எருசலேம் தேவாலயத்திலும் பலிபீடத்தண்டை பயன்படுத்தப்படுகின்ற ஒரு பாத்திரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதே போன்றதொரு பாத்திரம் பரலோகத்திலும் காணப்படுகிறது. குறிப்பாக தேவன் முன்பாக தேவனை தொழுது கொள்ளும் போது இப்பாத்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த காட்சியை போன்றதொரு காட்சியை கண்டதினால் தான் மோசே தூபக் கலசத்தை செய்ய பணித்தார். தூப கலசத்தில் போட்டு தூபம் ஏற்றக் கூடிய பொருட்கள் குறித்த குறிப்புகளும் உள்ளன. ஆனால் பரலோகத்தின் தூப கலசத்தில் தூப வர்க்கங்களாக பரிசுத்தவான்களின் ஜெபங்களையே குறிப்பிடுகின்றார்.
பரிசுத்தவான்களின் ஜெபங்கள் குறித்து நாம் விளக்கமாக அறிந்து கொள்வது இயலாத காரியம். என்றாலும் சில உண்மைகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்றாகின்றது. இந்த பரிசுத்தவான்கள் யார்?. யோவான் இவர்கள் குறித்த காரியங்களை தன் நூல்களில் தெரிவித்திருக்க வேண்டும். வெளி 14:12;16:6;17:6;18:20,24;20:6. இந்த வசனங்களின்படி இரு விஷயங்கள் முக்கியமானதாகும். யார் பரிசுத்தவான் என்றால் இவர்கள் தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தையும் காத்துக் கொண்டவர்கள். மேலும் இரத்த சாட்சிகளானவர்கள் ஆவர். இத்தகைய தன்மை கொண்டவர்களே பரிசுத்தவான்களாக அறியப்படுகின்றார்கள். இவர்களுடைய ஜெபங்கள் பாடுகளிலும் தேவனை புகழ்கின்றதாகவும் தேவனை மகிமைப்படுத்துகின்றதாகவும் தேவனுடைய தூய்மையையும் நீதியையும் இரட்சண்ய கிரியைகளையும் உயர்த்தி காண்பிக்கிறதாகவும் இருந்திருக்க வேண்டும். தாங்கள் இரத்த சாட்சிகளானாலும் தங்களின் நற்கிரியைகளை எடுத்துக் கொள்ளாதபடிக்கு தேவனுடைய மகத்துவங்களை எடுத்துக் கூறி வேண்டுதல் செய்து மடிந்து போனார்கள்.
இத்தகைய ஜெபங்களை தூப வர்க்கத்திற்கு இணையாக தேவன் கருதினார். தனது ஞானத்தால் உருவாக்கப்படும் தூப வர்க்கத்தை விட பரிசுத்தவான்களின் இத்தகைய ஜெபங்களே மேன்மையானதாக காணப்பட்டது. இந்த ஜெபங்களின் நறுமணம் நான்கு ஜீவன்களின் 24 மூப்பர்களின் துதி பாடலோடு இணைந்து செல்கின்றதாய் உள்ளது. பரலோக ஜீவராசிகளின் புகழ் பாட்டுக்கு ஒத்து வருகிற ஜெபங்களாகிய புகழ் மாலைகளே தேவன் விரும்புகின்றார். பரலோக ஜீவ ராசிகளுக்கு இணையானவர்களாக காணப்படுகின்றவர்களே பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தேவன் முன்னிலையில் நாம் நிற்க அழைக்கப்படுவோமோ இல்லையோ என் ஜெபங்கள் அவர் சந்நிதியில் சென்று சேர கற்பனைகளை அசட்டை செய்யாமலும், இயேசுவை நிராகரிக்காமலும் இரத்தசாட்சிகளாக - உயிர் சாட்சிகளாக வாழுவோமாக.
கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். லேவி 20:26.
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். சங்கீதம் 30:4.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment