CCM Tamil Bible Study - என்னோடு கூட உட்காருவான்
- Get link
- X
- Other Apps
என்னோடு கூட உட்காருவான்
வெளி3:21c. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்.
வெளி 1:6;2:26,27;மத்19:28;லூக்22:30;1கொரி6:2,3;2தீமோ2:12.
கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்ததுபோல கிறிஸ்துவை முழுமையாக பின்பற்றி வாழ்கிறவர்கள் கிறிஸ்துவின் ஆளுகையில் கிறிஸ்துவோடு கூட உட்கார அருள் செய்யப்படும் என்று கூறுகின்றார்.
சீஷர்களை அனுப்பும் போதும் இதே விதமாய் மத்28:18-20 ல் கூறியுள்ளதை காண்கின்றோம். இக்கூற்றானது சில உண்மைகளை நமக்கு அறிவிக்கின்றது. அவைகளை நாம் தியானிக்கலாம்:-
1. இயேசு கிறிஸ்து தமது இராஜ்யத்தில் ஆளுகை செய்யும் போது சீஷர்களும் கூட உட்காரும்படி ஏற்படுத்தப்படுவதை குறிக்கின்றது. இவர்களோடு 12 கோத்திரபிதாக்களும் சிங்காசனத்தில் உட்காருவர். இந்த ஆட்சியுரிமை இருவிதங்களில் தீர்மானிக்கப்படுகிறதாயிருக்கலாம். ஆயிரம் வருடம் அரசாட்சியில் 12 கோத்திர பிதாக்களும் சிங்காசனங்களில் உட்கார்ந்து உலகை நியாயம் விசாரிக்க கூடும். சீஷர்கள் ஏற்கனவே இயேசுவோடு உட்கார்ந்து பந்தியமர்ந்தனர். புதிய பூமியில் கிறிஸ்துவின் ஆட்சி அமையும்போது 12 கோத்திர பிதாக்களும் 12 சீடர்களும் கூட உட்கார்ந்து ஆட்சி செய்வார்.
2. இயேசு கிறிஸ்து சீஷர்களின் திருப்பணிகளில் கூடவே இருப்பதாகக் கூறுகின்றார். இதனை சுவிசேஷங்களில் பல இடங்களில் காண்கின்றோம். உலகத்தின் முடிவு வரையிலும் கூடவே இருப்பதாக கூறுகிறார். இயேசு பூமியில் வாழ்ந்தபோது மட்டுமல்ல பரலோகத்தில் இருக்கும் போதும் கூடவே இருப்பதாகக் கூறுகின்றார்.
3. கிறிஸ்துவோடு கூட உட்காருதல். இக்காரியமானது கிறிஸ்துவோடு கூட வாழ்வதின் இறுதி நிலையாகும். கிறிஸ்துவோடு வாழ்ந்து கிறிஸ்துவோடு பணிசெய்து நிறைவடைபவர்களே கிறிஸ்துவோடு சிங்காசனங்களில் உட்காரவும் முடியும். சிலுவையில் கிறிஸ்துவோடு மரித்த கள்வனுக்கும் இதே பாக்கியம் கிடைத்தது. என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்பதாகும். கிறிஸ்துவோடு பந்தியமர்ந்தவர்கள், கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள், கிறிஸ்துவோடு மரித்தவர்கள், கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் கிறிஸ்துவோடு உட்காருவார்கள். இவர்கள் கிறிஸ்துவை பின்தொடர்பவர்களாக இருப்பர். இனி பிரிவே இல்லை. அன்று ஏதேனில் உண்டான பிரிவை போலல்லாது இனிப் பிரிவே இல்லாத வாழ்வு உண்டாகும்.
சபையானது உலகத்தை நியாயம் விசாரிக்கும் ஆற்றல் உள்ளது.1கொரி6:2. அந்த உரிமை இருந்தும் உலகத்தை ஆளுகை செய்வதை காண முடியவில்லை. அப்படியானால் சபையானது பாவத்தினிமித்தம், அக்கிரமங்களினிமித்தம் நியாயத்தீர்ப்பின் நாளில் கிறிஸ்துவின் முன்னிலையில் உலகத்தை குற்றம்சாட்டும். ஆகவே சபையானது அந்தந்த பகுதிகளின் காவலனாக இருக்கிறது என்பதை அறிவோமாக.
அவரோடிருக்க கிடைத்த வாய்ப்பை உலக ஸ்திதிகளுக்காக வேண்டி விட்டுவிடாதீர்கள்.
இந்த வார்த்தை உண்மையுள்ளது. என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்.அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார். நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
2 தீமோத்தேயு 2:11-13.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment