CCM Tamil Bible Study - கிறிஸ்துவை மறுதலிக்காதவர்கள் - Those who do not deny Christ
- Get link
- X
- Other Apps
கிறிஸ்துவை மறுதலிக்காதவர்கள்
வெளி3:8b. கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலிக்கவில்லை. வெளி2:13;மத் 26:70-72;லூக்12:9;அப்3:13,14;1தீமோ5:8;1யோவா2:22,23;யூதா 1:4;நீதி 30:9.
பேதுரு இயேசுவை விசுவாசித்தார், அறிக்கையுமிட்டார். ஆனால் மாம்சீக முறையில் இயேசுவை தெரியாது என்று சொல்லி மறுதலித்தார். நாமத்தை மறுதலித்தல் என்பது இயேசுவை மறுதலித்தல் ஆகும். விசுவாசத்தை மறுதலிப்பதற்கும், கிறிஸ்துவை மறுதலிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பிலதெல்பியா சபையார் இயேசுவை தனிபட்ட முறையில் மறுதலிக்கவில்லை. பேதுருவைப்போல அவரை எங்களுக்கு தெரியாது என்று சொல்லவில்லை.
மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கை செய்கிறவர்களாக இருந்தார்கள். இயேசுவை எங்களுக்கு தெரியும் என்றும், நாங்கள் அவரை மட்டுமே பின்தொடர்வோம் என்றும் அழுத்தமாக கூறினார்கள். கொஞ்சம் பெலன் இருந்தும் என்பது இருவிதமான பொருளை தருகின்றது. ஒரு பொருள் குறித்து நேற்றையதினம் சிந்தித்தோம். இரண்டாவது கருத்துப்படி, பிலதெல்பியா சபை மக்கள் மிகுந்த உபத்திரவத்தில் தள்ளப்பட்டார்கள். தேசத்தின் – சமூகத்தின் – அரசியலின் கட்டமைப்போடு இணைந்து போகாததினால் வறுமையையும், தரித்திரத்தையும் அடைந்தார்கள். சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். விசுவாசம் மட்டும் போதும் என்று சொல்லியிருந்தால் இவ்வித பிரச்சனை இருந்திருக்காது. இயேசு எங்களுக்கு வேண்டும். நாங்கள் அவரைத்தான் பின்பற்றுவோம். நாங்கள் அவரது நாமத்தையே சொல்லுவோம் என்று கூறினார்கள். நெருக்கப்பட்டும் முறிந்துப்போகாதிருந்தார்கள். ஒடுக்கப்பட்டும் இடறிப்போகாதிருந்தார்கள்.
பணம், பொன், பொருள், அரசாங்க சலுகை, உபகார சம்பளம் போன்றவற்றை உதறித் தள்ளினார்கள். இவைகளை விடவும் எங்கள் இயேசு மட்டும் எங்களுக்கு போதும் என்று அறிக்கையிட்டார்கள். இதனால் தரித்திரம் அடைந்தார்கள், ஒதுக்கப்பட்டார்கள், வெறுக்கப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள். கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும் விசுவாசத்தில் உறுதியாய் நின்றார்கள்.
இந்த பிலதெல்பியா சபையாரைப் போல இக்காலத்திலும் அரசாங்க சலுகை வேண்டாம், உபகார சம்பளம் வேண்டாம், வேலை வாய்ப்புகள் வேண்டாம், உதவிகள் வேண்டாம் என்று சொல்லி இயேசுவை சொல்லிலும் செயலிலும், இருதயத்திலும் பெயரிலும் அறிக்கையிடுகிறவர்கள் இருக்கிறார்கள்.
இயேசு என்ற நாமத்தை பின்பற்றி நடப்போர் இயேசுவைப்போல நடக்க வேண்டும். இயேசுவைப்போல் வாழ இயலாவிட்டால் இடறல்கள் முன் வைக்கப்படும் என்பதை மறவாதீர். மனுஷர்களை – அரசாங்கத்தை ஏமாற்றலாம். ஆனால் ஆண்டவரை ஏமாற்றி வாழ முடியாது. உண்மை ஒருநாள் வெளியரங்கமாகும்.
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 2கொரிந்தியர் 4:7-10..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment