CCM Tamil Bible Study - சிலுவை கூறும் செய்தி 3 - The message of the Cross 3
- Get link
- X
- Other Apps
சிலுவை கூறும் செய்தி - 3
சாபமான கிறிஸ்து
கலா3:13. கிறிஸ்து நமக்காக சாபமாகி.. நம்மை மீட்டுக்கொண்டார். உபா21:23;2சாமு17:23;18:10,141,5;21:3-14;எஸ்த7:10;9:14;மத்27:5;1பேது2:24;ரோம9:3.
இயேசு நமக்காக சாபமானார்
கிறிஸ்து நமக்காக சாபமானனார் என்று பவுல் கலாத்திய சபைக்கு கூறுகின்றார். சாபம் என்றால் முழுமையான வெறுப்புக்குள்ளாகுதல், பழி சுமத்தல், சாபவார்த்தைகளை தன்மேல் சுமத்தல். தெய்வ நிந்தனை, தேய்வ பழிக்கு ஆளாகுதல் ஆகும். இயேசு தெய்வ குற்றம் செய்தவராகவும், தெய்வ நிந்தனைக்குரியவராகவும், வெறுப்புக்குரியவராகவும் மாறினார்.
தேவனிடத்தில் ஆசீர்வாதம் மட்டுமே உண்டு. ஆகையினால்தான் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைக்கப்படுகின்றார். ஆசீர்வாதத்தை தன்னகத்தே கொண்டிருப்பதால் அவரிடமிருந்து புறப்பட்டு வந்த இயேசு கிறிஸ்துவும் ஆசீர்வாத கிறிஸ்துவாகவே வெளிப்பட்டார். அதே வேளையில் ஆசீர்வாதத்திற்குரிய வழிமுறைகளில் நடவாதிருக்கும்போது சபிக்கவும் செய்துள்ளார். ஆசீர்வாதமானது தன்மையாகவும் வாக்காகவும் வெளிப்பட, சாபமோ வாக்காக மட்டுமே இருக்கிறது. தேவனுடைய ஆசீர்வாதத்திற்குரிய வாக்குகளுக்கு கீழ்படியாமல் செயல்படுகிற யாவர் மேலும் இந்த சாபம் உடனே வந்து பலிக்கின்றது. வாக்காக இருக்கின்ற இந்த சாபம் இயேசுவின்மேல் வந்து சுமந்தது. சாபத்தை சுமந்துக் கொண்டிருக்கின்றவர்களை மீட்க வேண்டி வந்ததினால். தன்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், தோற்றத்தில் சபிக்கப்பட்டவராகவும் காணப்பட்டார்.
இயேசு மரத்திலே தொங்கியதினால் அவர் சாபத்துக்குள்ளானாரா? அல்லது சாபத்தை தன்மேல் சுமந்து கொண்டதினால் மரத்தில் தொங்கவிடப்பட்டாரா என்று தியானிக்கும்போது இரண்டுமே வெவ்வேறான நிலையில் ஒன்றாகவே காணப்படுகிறது. இயேசுவை தெய்வதூஷணகாரன், தெய்வ குற்றம் செய்தவர் என்று கூறிய இஸ்ராயேலர் அவரை சாபத்தின் சாயலாக உவமிப்பதற்காக பிரமாணங்களின்படி சிலுவையில் தொங்க வைத்து சாபமாக்கினார்கள்.
இஸ்ராயேலரால் சாபமாக்கப்பட்ட இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் சாபத்தை சுமந்து சிலுவையிலே அதை அறைந்து கொன்று சாபத்துக்கு முடிவுண்டாக்கினார். சாபத்தின் சாயலை தன் சரீரத்தில் சுமந்து அதை சாகடித்து தானும் மரணமடைந்து சாப கிரியைகளை நீர்த்துப்போகச் செய்தார். இதனால் சாபம் முடிவுக்கு வந்தது. இயேசுவும் மரணத்திலிருந்து உயிர்த்ததினாலே ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துவாக உயர்ந்து நிற்கின்றார். பாவத்தினால் உண்டான சாபம் தன் கொடுக்கை இழந்தது. சாபகட்டு அறுந்து போயிற்று.
ஒருவர் சரீரபிரகாரமாக வந்த இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு தனது கீழ்படியாமையினால் உண்டான சாபத்தையும், ஆதி சாபத்தையும் இயேசு சிலுவையிலே கொன்று அதற்கு முடிவுண்டாக்கினார் என்று நம்பி கீழ்படிதலுக்குள் வருவானென்றால் சாபம் நீக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவனாக வெளிப்படுகின்றான். கிறிஸ்து எனக்காக சாபமாகி சிலுவையில் என் சாபத்தை தொலைத்தார். இப்பொழுது நான் விடுதலையாயிருக்கிறேன், ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறேன் என்று அறிக்கை செய்து வாழ்வதே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாகும்.
சிலுவை மரம் சாபத்தின் சின்னம் அல்ல, சாபத்தை கொன்று முடிவுண்டாக்கும் வரலாற்று சின்னம். சிலுவையை பார்க்கும்போதெல்லாம் என் சாபம் சாகடிக்கப்பட்டது என்று உணர்கின்றேன்.
பரிகரிக்கப்பட்ட சாபம் திரும்பவும் நமது சரீரங்களில் பெலன் கொள்ளாத படிக்கு கீழ்படிதலின் ஆவியையுடையவர்களாக வாழ நம்மை ஒப்புக்கொடுப்போமாக.
யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள் சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சகரியா8:13.
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. கலாத்தியர் 3:10-14..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment